24.8.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 5

அழகியசிங்கர் 

 அக்டோபர் முதல் நாளில....

ந பெரியசாமிநேற்று சிற்றுண்டி முடித்து
வாசலில் அமர்ந்திருந்தேன்
கொஞ்சம் ஆட்டுப்பால் வேண்டுமென
காந்தி வந்தார்
பட்டியே இல்லை
ஆட்டிற்கு எங்கே போகவென்றேன்
பரிதாபமாக எனைப் பார்க்க
இருவரும் பயணித்தோம்
பட்டிகளைத் தேடி
பெரும் யாத்திரையாகிட
களைத்துத் திரும்பினோம்
கசாப்புக் கûடையொன்றில்
தொங்கும் ஆடு பார்த்து
அழுது புரண்டார்
பெரும்பாடாகிவிட்டது
தேற்றி இடம் கடந்து வர
சிறு தொலைவுக்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்
வேண்டாம் போகலாம் என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து
மது அருந்துகிறார்கள் என்றேன்
ஹேராமென தலையிலடித்து
அரசு என்ன செய்கிறது
பார்வையைக் கேள்வியாக்கினார்
சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசென்றேன்
ஐயோவென மயங்கிச் சரிந்தார்
இதுதான் சமயமென
பாக்கெட் பாலில் நீர் கலந்து
முகம் தெளித்தேன்
அரை மயக்கத்தில் ஆட்டுப் பாலாவென்றார்
ஆம் என பொய்யுரைக்க
சுவை இல்லை என்றார்
எல்லாவற்றிலும் கலப்படமென்றேன்
எங்கு எப்படி கிடைத்ததென
கேட்கத் துவங்கும் முன்னே
இனி உங்கள் ஜனன நாளில் மட்டும்
வாருங்கள் என்றேன்

போதுமடா சாமி
என்றார் காந்தி

நன்றி : தோட்டாக்கள் பாயும் வெளி - ந பெரியசாமி - கவிதைகள் - விலை : ரூ.70 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 98426 47101;;

     

23.8.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 4

அழகியசிங்கர் 

 4)    பூவொன்று

லாவண்யா சுந்தரராஜன் 


மழைத்துளியென
மஞ்சள் மலர்களை
உதிர்த்துக்கொண்டிருந்தது
அம்மரம்

நிழலுக்கென ஒதுங்கிய பேருந்து
அதில் சில மலர்களை
முன்கண்ணாடியில் ஏந்திச் சென்றது
கண்ணாடியில் வழுக்கிய பூக்கள்
சாலையில் விழுந்து நசுங்கின

வைப்பர் புறக்கணித்த பூக்கள்
ரோட்டோரம் சிதறின
பெண்டுலமாக ஆடும் வைப்பரில்
சிக்கிய பூக்கள்
நைந்து கிழிந்தன

பின்னும் வைப்பர்
கிட்டிய பூக்களை விடாது
அலைக்கழித்து
கசக்கிக்கொண்டிருக்கிறது

எதுவும் செய்யவியலாது
பூக்கள் சிதைவுறும் காட்சி
மனசுக்குள் குமைய
நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கிறேன்


நன்றி : இரவைப் பருகும் பறவை - கவிதைகள் - லாவண்யா சுந்தரராஜன் - விலை ரூ.70 - பக் : 80 - காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525


22.8.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 3

அழகியசிங்கர் 


ராஜன் ஆத்தியப்பன் கவிதை 
   மிருக காட்சி சாலைக்கு
குழந்தை குட்டியோடு குடும்பமாய்
சென்றிருந்தோம்

சதுர வடிவிலான வானத்தில்
அலுப்புடன் தாவின பறவைகள்

பறவைகளை வளர்ப்பவர்கள்
இறுகிய முதுகுடையவர்கள் என்றானொருவன்

ஓவியத்தில்தான் சிங்கம் அழகு
சிறுமியொருத்தி

பெயரிட்டக்
கண்ணாடிப் பேழைகளில்
சீறித்தளர்ந்த பாம்புகள்
பாம்புகள் போலவேயிருந்தன

கல்லெறியாதீர்கள்
அறிவிப்புப் பலகை
கானக நதியொன்றை வெயிலில் தியானிக்கும்
முதலைகளை
கல்லெறிந்து உணர்விக்கலாமென
ஊமை மொழி சொன்னது

நன்றி : கருவிகளின் ஞாயிறு - கவிதைகள் - ராஜன் ஆத்தியப்பன் - 80 பக்கங்கள் - விலை ரூ.80 - படிகம் வெளியீடு, 4 - 184 தெற்குத்தெரு, மாடத்தட்டுவிளை. வில்லுக்குறி - செல் : 9840848681

18.8.16

ஒரு ஞாபகம்

அழகியசிங்கர்ஒரு 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  தமிழவன் - ஜி கே எழுதிய மர்மநாவல் என்ற ஒரு நாவல் எழுதி உள்ளார்.  அந்த நாவலின் விமர்சனக் கூட்டம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி 2000 ஆம் ஆண்டில் நடந்தது.  நான்தான் ஏற்பாடு செய்தேன்.  அக் கூட்டம் பாரதியார் இல்லத்தில் திருவல்லிக்கேணியில் நடந்தது.  அன்று ஞாயிற்றுக்கிழமை.  காலை 11 மணி கூட்டம் ஆரம்பம் ஆயிற்று.  பொதுவாக நான் கூட்டத்தில் பேசுவதை காசெட் ரிக்கார்டரை வைத்துப் பதிவு செய்யும் வழக்கத்தில் உள்ளவன்.  அந்தக் கூட்டத்தையும் பதிவு செய்தேன்.  அக் கூட்டம் நேரடியாக மைக் மூலம் காசெட்டில் பதிவு செய்வதுபோல் செய்துள்ளேன்.  அதனால் வெளி சப்தம் காசெட்டில் ஏறவில்லை.

ரொம்ப தெளிவாக எல்லோரும் பேசியது அதில் பதிவாகி உள்ளது.  கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஞானக்கூத்தன்.  நான் திரும்பவும் அந்தக் காசெட்டை இன்று கேட்டபோது.  ஆச்சரியப்பட்டேன்.  என்ன ஆச்சரியம் என்றால் தலைமை தாங்கிய ஞானக்கூத்தன் பிரமாதமான முறையில் அக்கூட்டத்தை எடுத்து நடத்துகிறார்.

ஒவ்வொருவர் பேசி முடித்தவுடன் ஞானக்கூத்தனும் பேசுகிறார்.  அவருக்குத் தெரிந்த பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.  அக் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.  அவர்களுடைய லிஸ்டை இங்கு தர விரும்புகிறேன்.

1. அ மங்கை 2. சா தேவதாஸ் 3. எஸ் சண்முகம் 4. அழகியசிங்கர் 5. பா வெங்கடேசன் கட்டுரையை செந்தூரம் ஜெகதீஷ் படிக்கிறார் 6. முரளி அரூபன் 7. பஞ்சு 8. பவா செல்லத்துரை.  இறுதியில் தமிழவன், நன்றி உரையை அந்தப்புத்தகத்தை வெளியிட்ட அலைகள் பதிப்பக அதிபர் சிவனும் உரையாற்றுகிறார். 

ஒவ்வொருவர் பேச்சும் கேட்க  கேட்க சுவாரசியமாக இருக்கிறது. உண்மையில் ஞானக்கூத்தனின் தலைமை உரையைக் கேட்டபோது, ஞானக்கூத்தனே நேரில் வந்து பேசுவதுபோல் தோன்றியது.  அவ்வளவு தெளிவாக ரிக்கார்ட் ஆகியிருக்கிறது.

அந் நாவலைப் பற்றி அ மங்கை அவர்களும், பவா செல்லத்துரையும் ஒன்றை குறிப்பிடுகிறார்கள்.  அந் நாவலில் பெண் பாத்திரமே வரவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.  இது ஏன் என்றும் கேள்வியை எழுப்புகிறார்கள்.  தலைமை பொறுப்பைக் கொண்ட ஞானக்கூத்தனும் தமிழவன்தான் ஏற்புரையில் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 

தமிழவன் பேசும்போது, 'ஏன் பெண் பாத்திரம் வரவில்லை என்பது எனக்கே தெரியவில்லை' என்கிறார்.

நான் இந்த காசெட்டில் பதிவானதை சோனி ரிக்கார்டில் பதிவிரக்கம் செய்து அதை அப்படியே சிடியில் பிரதி எடுத்துத் தரலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யார் விருப்பப்பட்டு என்னிடம் கேட்பார்கள் என்பது பெரிய கேள்விதான்.  

16.8.16

ஒரு அறிவிப்பு

அழகியசிங்கர்

தமிழில் வித்தியாசமான முறையில் விமர்சன மரபை உருவாக்கியவர் தமிழவன். ரசனை முறையில் படைப்பிலக்கியத்தை அணுகியவர் க நா சு. சி சு செல்லப்பாவோ விமர்சனத்திற்கு ஒரு அலசல் முறையை உருவாக்கியவர். க நா சுவைத் தொடர்ந்து வெங்கட்சாமிநாதனும், பிரமிளும் விமர்சனத்தை அணுக, சி சு செல்லப்பாவைத் தொடர்ந்து தமிழவன் விஞ்ஞானப் பூர்வமான விமர்சனத்தை முன் வைத்தார். புதியதாக உருவான பல இஸம்களை தமிழிலும் கொண்டு வந்தார். மற்ற மொழிகளில் தமிழவன் மாதிரி ஒரு படைப்பாளி இருந்திருந்தால் பெரிதும் கொண்டாடப்பட்டிருப்பார். அவரைத் தொடர்ந்து பலர் அவர் பாதையில் விமர்சனத்தை அணுகி உள்ளனர். இன்று வரை அந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்வது சற்று சிரமமானது.

விமர்சனம் மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்திலும் தமிழவன் பங்கு முக்கியமானது. நாவல்கள், சிறுகதைகள் என்று பலவற்றை புதிய முறை எழுத்தில் முயற்சி செய்துள்ளார. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற புதுவகை நாவல் ஒன்றை அவர் 1985 ஆம் ஆண்டில் முதன் முறையாக உருவாக்கி உள்ளார்.

தற்போது வந்துள்ள சிறுகதைத் தொகுப்பு நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற தொகுப்பு, முன்பு வெளிவந்த அவருடைய கதை முறையை முற்றாகத் துறந்து வெளிவந்திருக்கிறது.

வரும் 21ஆம் தேதி ஞாயிறு தமிழவன் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தை சிற்றேடும், நவீன விருட்சமும் ஏற்படுத்துகிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.